தமிழ்நாடு

இசைஞானியுடன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு!

By MUTHUKRISHNAN
07 Jun 2025, 12:57 PM
கோவைக்கு சென்றுள்ள இசைஞானி இளையராஜாவினை பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து உரையாடியுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டது முதல் பெரியளவில் அவர் குறித்த செய்திகள் வரவில்லை. சமீபத்தில் அண்ணாப்பல்கலை கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஒரு காணொளியை வெளியிட்டு மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதும், அரசு பாலியல் வன்கொடுமை வழக்கினை கையாண்ட விதம் குறித்தும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில் நிகழ்வொன்றில் பங்கேற்க கோவை வருகை தந்திருந்த இசையமைப்பாளர் இளையராஜாவினை அண்ணாமலை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுத்தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பதிவில், ”கோவையில், நமது இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜா அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

நாளை அமித்ஷா தமிழகம் வர உள்ள நிலையில், இளையராஜாவினை அண்ணாமலை சந்தித்தது இயல்பான ஒன்றா? என கேள்விகள் எழுந்துள்ளது. அதே சமயம் நேற்றைய தினம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இளைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருதான தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தான் இளையராஜா கோவை வருகை தந்துள்ளார். மற்றபடி அரசியல் ரீதியாக எந்த நகர்வும் இல்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



நேற்றைய நிகழ்வில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இளையராஜா, “நான் வைத்து இருக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான். இன்றும் அதில் தான் கம்போஸ் செய்கிறேன். என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது” என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.

மேலும், “நான் பேச்சாளர் இல்லை. நான் ஒரு பட்டாளி. பட்டாளி என்றால் பாட்டு படுபவன். பட்டாளி என்பவன் வேலை செய்பவன். அவன் படும் பாடுகளால் அவன் பட்டாளியாக இருக்கிறான். அந்த பட்டாளிகளில் நானும் ஒருவன். என் பாடு என்பது வேறு. அவர்களது பாடு வேறு. என் பாடு தான் பாட்டுகளாக மாறுகிறது. கோவையில் என் காலடி படாத இடமே இல்லை. கோவையில் என் ஆர்மோனியம் ஒலிக்காத தெருவே கிடையாது. எனது ஆர்மோனியம் பெட்டி கோவையில் செய்தது தான். எனது அண்னன் வாங்கி வந்த ஆர்மோனியம் அது. அதில் தான் இன்றும் நான் பாடல்களை கம்போஸ் செய்து வருகிறேன். எனக்கும் கோவைக்கும் நெருங்கிய உறவு இல்லை. தொடர்பு தான் உள்ளது. என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது” என குறிப்பிட்டு இருந்தார்.