Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கொடிக்கம்பங்கள் விவகாரம்: தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

By VASUKI
17 Sep 2025, 03:48 PM
கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்ரல் 28க்குள் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி இருந்தனர்.

தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார். அதேபோலக் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை அரசு வகுத்துள்ளதாகக் கூறி அதனைத் தாக்கல் செய்தார்.

அப்போது அவர், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காகக் கொடிக்கம்பங்கள் அமைக்கும்போது, சாலையில் தார்கள் மீதும், சாலை நடுவில் உள்ள செண்டர் மீடியன் பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்கக் கூடாது; மூன்று நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்களை வைத்திருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணையும், வழிகாட்டு விதிமுறைகளும் பிறப்பித்த தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதி, இந்த விதிமுறைகளையும், அரசாணையையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும், இவை ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்படி பாரபட்சமின்றி பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழிகாட்டு விதிமுறைகளை அமல்படுத்தாமல் மீறிச் செயல்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, விசாரணையை அக்டோபர் 15 ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.