கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கரூரிலிருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
மண்மங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை சுமார் 18 கிலோமீட்டர் தூரம் பின் தொடர்ந்து சென்று நாமக்கல் மாவட்டம் எல்லையான வேலூர் போலீஸ் சோதனைச் சாவடியில் மடக்கி பிடித்தார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதன்பின் அருகிலிருந்த சோதனை சாவடியில் பாதுகாப்பில் இருந்த காவலர்களிடம் நடந்த விவரத்தை கூறினர்.
கரூர் மாவட்டத்தில் நடந்த மணல் திருட்டு சம்பவம் என்பதால் முன்னாள் அமைச்சர் தரப்பினர், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அழைத்துச் சென்றனர். மேலும், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு மணல் லாரியை கொண்டு வந்து காவல் துறை ஆய்வாளரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஒப்படைத்தனர். காவல்நிலையத்தில் அதிமுக நிர்வாகி சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் மணல் லாரி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் பிடிபட்டது என்பதால், தற்போது பரமத்தி காவல் நிலைய போலீசாரை வரவழைத்து லாரியானது ஒப்படைப்பட்டுள்ளது.