பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், 30 கோடி ரூபாய் சொத்தை மறைத்துள்ளதாக, தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்த வாக்காளர் தினேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய்க்கு எதிராக தொகுதி வாக்காளர் தினேஷ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்து வருகிறார்.
முதல்வர் விஜய் தரப்பில் வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்த வாக்காளர் தினேஷ் தரப்பில் இன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, வேட்புமனுவில் தவறான தகவல் அளிக்கவோ, தகவலை மறைக்கவோ கூடாது; ஆனால், முதல்வர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில், பண்ருட்டியில் உள்ள 30 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன; அந்த சொத்தின் சர்வே எண், விற்பனைப் பத்திரம் உள்ளிட்ட அனைத்தும் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் வழக்கில் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை; உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன; அதேபோல, கொடைக்கானல், வில்பட்டியில் 50 சென்ட் நிலம் வாங்கியுள்ளதாக முதல்வர் விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்; ஆனால், வருவாய்த்துறை ஆவணங்களின்படி, அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் ஆகும் என்றும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
வேட்புமனுவில் சொத்து விவரங்கள் குறித்த பிரமாணப்பத்திரத்தில் எந்த விவரங்களையும் குறிப்பிடாமல் காலியாக சமர்ப்பித்தாலும், அது நிராகரிக்கப்பட வேண்டியது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்றும், சொத்து விவரங்களை மறைத்தது குறித்து தேர்தல் வழக்கில்தான், முழுமையாக விசாரணை நடத்த முடியும் என்றும், வேட்புமனு பரிசீலனையின்போது வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் வாக்காளரால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என வாதிடப்பட்டது.
விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதி, சொத்துக்களை குறைத்துக் காட்டியதற்காக தேர்தலை செல்லாது என அறிவிக்க முடியுமா? உச்ச நட்சத்திரமான விஜய்,600 கோடி ரூபாய் சொத்துக் கணக்கை காட்டியுள்ள நிலையில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை தெரிவிக்கவில்லை என்றால், அது எப்படி அவருடைய தேர்தல் வெற்றியை பாதிக்கும்?
கோடீஸ்வரரிடம் எங்கெல்லாம் சொத்து இருக்கிறது எனக் கேட்டால் அவருக்கு எப்படி தெரியும்? ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் விஜய்யின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். வாக்காளர் தினேஷ் தரப்பு வாதங்கள் நிறைவடையாததை அடுத்து விசாரணையை நீதிபதி நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.