சென்னை வேளச்சேரி பகுதியில் மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் வடமாநில இளைஞர்கள் இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் 61 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் காயங்களுடன் நடந்து சென்றுள்ளார். அங்கு வந்த ரோந்து காவல் துறையினர் அவரிடம் விசாரித்த போது, தன்னை வழிமறித்து அடித்து சிலர் பணப்பையைப் பறித்துச் சென்றதாக முதற்கட்டமாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காவல் துறையினர் அவரை மீட்டுச் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதி செய்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசாரின் அதிரடி விசாரணை மற்றும் கைது
காவல் துறையினர் நடத்திய மேல் விசாரணையில், பாதிக்கப்பட்டவர் வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் யாசகம் பெற்று வந்தவர் என்பதும், வழிப்பறி என்று கூறப்பட்ட தகவல் தவறானது என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய வேளச்சேரி காவல் துறையினர், வேளச்சேரியில் உள்ள உணவகங்களில் பணியாற்றி வந்த வடமாநில இளைஞர்கள் இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை காவல் துறை விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை காவல் துறை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "வழக்குப்பதிவு செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அறிவியல் பூர்வ ஆதாரங்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியத் தடயங்கள் கைப்பற்றப்பட்டு, பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான மருத்துவ மற்றும் மனநல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் புலன் விசாரணையை விரைவில் முடித்துக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.