தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மோசடி தொடர்பாக, அமலாக்கத்துறையினர் இன்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்காக 2017-இல் ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு நடத்தியது. இதன் முடிவுகள் வெளியான போது, மதிப்பெண்களில் பெரும் குளறுபடிகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உம்மா அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 156 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, இடைத்தரகர்கள் பலரைக் கைது செய்தனர். இந்தத் தேர்வு முறைகேட்டில் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் கைமாறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
முக்கிய நகரங்களில் சோதனை
இந்த விவகாரத்தில் பெருமளவில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் தற்போது களமிறங்கியுள்ளனர்.
சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய 4 முக்கிய நகரங்கள் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 18 இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறையினர் தங்களது தீவிரத் தேடுதல் வேட்டையையும் சோதனையையும் நடத்தி வருகின்றனர்.