தமிழ்நாடு

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகள் கடும் காட்டம்!

By Christon
09 Apr 2026, 02:57 PM
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, மனுதாரரின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தது.

மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ரம்ஜான் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகள், இந்துக்கள் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கின்றனர்" எனக் கூறி வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்ட இதே விவகாரத்தை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதைக் கண்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

அரசியல் லாபமும் ஊடக விளம்பரமும்

"நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா? ஊடகங்களில் பெயர் வர வேண்டும் என்பதற்காகத் தேவையற்ற மனுக்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதே இவருக்கு வேலையாகப் போய்விட்டது" என்று நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றால், மனுதாரர் கோவில் நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாகக் கட்ட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞர்களும், இத்தகைய மனுக்களால் அரசுக்குக் கால விரயமும், பண இழப்பும் ஏற்படுவதால் அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.

உறுதிமொழிப் பத்திரத்திற்கு உத்தரவு

தொடக்கத்தில் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முற்பட்ட நீதிபதிகள், பின்னர் அதனை 50,000 ரூபாயாகக் குறைத்தனர். இருப்பினும், அந்தத் தொகையையும் கட்ட முடியாது என மனுதாரர் தரப்பு முறையிட்டதால், "இனி வரும் காலங்களில் இது போன்ற தேவையற்ற பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்ய மாட்டேன்" என மனுதாரர் நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அவ்வாறு பத்திரம் தாக்கல் செய்யும் பட்சத்தில், அபராதத் தொகையை ரத்து செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.