தமிழ்நாடு

டாஸ்மாக் வழக்கில் ஆவணங்கள் போதுமானதாக இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

By VASUKI
19 Jun 2025, 06:36 AM
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், எதன் அடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்ற காரணத்தை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.

அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், வீட்டை சீல் வைக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாதபோது எப்படி சீல் வைக்கப்பட்டது? கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும், இதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை எனக் கூறி ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி புதன்கிழமை அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆவணங்களை தாக்கல் செய்தார். சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் உங்கள் வாதத்துக்குப் பொருந்தவில்லை என்ற நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 எஃப் ஐஆர்களில் இவர்களது பெயர் இருந்ததா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத் துறை தரப்பில், பெயர் இருக்க வேண்டிய தேவையில்லை, எனதெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள்,‘சீல்’ வைக்க என்ன அதிகாரம் உள்ளது? என கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத் துறை தரப்பில், ‘சீல்’ வைத்ததை அகற்றி விடுவதாகவும், அதுகுறித்த நோட்டீஸை எடுத்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்கவும் தயார் என அமலாக்க துறை தரப்பு கூறியது.

இதையடுத்து சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய, கால அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைதத்த நீதிபதிகள், விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.