தமிழ்நாடு

வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக நிறைவேற்றவில்லை – அண்ணாமலை

By Jayakumar
18 Sep 2025, 11:31 AM
சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கடந்த 2021ல் திமுக ஆட்சி அமைந்த பின், நடப்பு நிதி ஆண்டு வரை 8,634 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 4,516 அறிவிப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதில், 3,455 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன.

256 திட்டங்களை நிறைவேற்ற சாத்தியமில்லை

இந்நிலையில், 256 அறிவிப்புகள் செயல்படுத்த சாத்தியக்கூறு இல்லை என்பதால், அவற்றை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியிருக்கிறது.

நாளொரு நாடகம் அரங்கேற்றம்

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்த திமுக அரசின் லட்சணம், ஆட்சியின் இறுதி ஆண்டில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவுப்புகள்தான். நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை வைத்தது மட்டும் தான்” என பத்திரிக்கை செய்தி ஒன்றை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.