நகராட்சி துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக, ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேரு-வை பாதுகாத்தது என, தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
தனது தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் நேரு தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முன்னாள் அமைச்சர் நேரு-வை பாதுகாத்தது என வாதிட்டார்.
மேலும், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, அதிமுக எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி நேருவுக்கு நோட்டீஸ் அனுப்பியும், அந்த அவகாசத்தை பயன்படுத்தாமல், பதிலளிக்க அவகாசம் வழங்கவில்லை என இந்த மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
இன்பதுரை வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு, 16 நாட்களுக்கு பின் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்காக காத்திருந்து விட்டு, தனது தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை என நேரு தரப்பில் உரிமை கோர முடியாது எனவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.
நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர், நேரு தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதால் நேருவின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தற்போதைய அரசு வாபஸ் பெற முடியாது எனவும், அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை எனவும் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்யும்படி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
மேலும், மறு ஆய்வு மனு மீது தீர்ப்பளிக்கும் வரை, நேருவுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.