தமிழ்நாடு

தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்வு!

By Christon
28 Feb 2026, 03:15 PM
சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதி நாளான இன்று நகைப்பிரியர்களுக்குப் பெரும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ஈரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியுள்ளதாலும், அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருவதாலும் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல், சர்வதேச முதலீட்டாளர்களைத் தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளது. இதன் விளைவாக, இன்று காலையில் உயர்ந்த விலையைத் தொடர்ந்து, மாலையிலும் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

காலை விலை நிலவரம்

நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,200-க்கு விற்பனையானது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,200 என்ற நிலையை எட்டியது.

மாலையில் மீண்டும் ஒரு உச்சம்

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் செய்திகள் தீவிரமடைந்த நிலையில், இன்று மாலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, சவரனுக்கு மேலும் ரூ.2,800 உயர்ந்து, தற்போது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,24,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை மாலையில் ரூ.350 உயர்ந்து ரூ.15,550-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கடும் உயர்வு

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று மாலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று காலையில் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.20,000 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி ரூ.3,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.320-க்கு விற்பனையாகிறது.