Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஹேர்கட்- வைரலாகும் இன்ஸ்டா வீடியோ

By MUTHUKRISHNAN
07 Jun 2025, 11:55 AM
அடையாரில் உள்ள தனுஷ் ஹேர் டிரஸ்ஸர்ஸ், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகிறது. இதுத்தொடர்பான வீடியோ இன்ஸ்டாவில் தற்போது வைரலாகி வருகிறது.
அடையார் டைம்ஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் வலைத்தள பக்கத்தில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஹேர்கட் செய்து வரும் சலூன் கடை பற்றி ஒரு காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இன்ஸ்டாவில் இந்த வீடியோ பலரது பாராட்டினை பெற்று வருகிறது.

தணிகைவேல் என்பவர் ”Dhanush Hair Dressers” (தனுஷ் முடிதிருத்த நிலையம்) என்கிற சலூன் கடையினை கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவருக்கு சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 3 கிளைகள் உள்ளது. அடையாறு (காமராஜர் சாலை), பெசண்ட் நகர் செல்லும் வழியில், வெட்டுவான்கனி (ECR பகுதி) போன்ற பகுதிகளில் இவரது சலூன் கடை உள்ளது.

தணிகைவேல் மூன்றாம் தலைமுறையாக சலூன் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 10 வருடங்களாக சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்து வருவதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதுகுறித்து தணிகைவேல் கூறுகையில்,” நாங்கள் பள்ளி பயிலும் காலத்தில் NCC மாஸ்டர் வந்து செக் பண்ணுவார். முடி அதிகமாக இருந்தால் வெட்ட சொல்லுவார். சில இடங்களில் மாணவர்களின் தலைமுடி ஒழுங்காக இல்லை என்ற காரணத்திற்காக அவர்களை பள்ளியிலிருந்து வெளியே அனுப்புவதும் உண்டு. எங்கள் கடையில் சாதாரணமாக முடிதிருத்தம் செய்ய ரூ.200- வசூலிக்கிறோம்” என்றார்.

மேலும் கூறுகையில்,”எங்க கடையில் அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக முடி வெட்டிக் கொள்வதற்கான ரூல்ஸ் என்னவென்றால், அவர்கள் பள்ளி அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். சென்னை மாநகராட்சி அல்லது அரசு பள்ளி சீருடை அணிந்திருக்க வேண்டும். முடி வெட்டுறது ரொம்ப அவசியம். முடி திருத்தம் மேற்கொள்ளும் போது மாணவர்களின் ஒட்டுமொத்த தோற்றம் மாறுவதோடு, அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்” என்றார்.

”நாங்கள் 10 வருடமாக இலவசமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்து வருகிறோம். ஆரம்பக் காலக்கட்டத்தில் நாங்கள் தான் முன்வந்து அரசு பள்ளிகளை தொடர்பு கொண்டு எங்களது சேவை குறித்து எடுத்துரைத்தோம். தற்போது பள்ளி தலைமையாசிரியர்களே எங்கள் கடைக்கு முடிதிருத்தம் செய்ய வேண்டிய பள்ளி மாணவர்களை அனுப்பி வைக்கிறார்கள். பெரும்பாலும் பள்ளி விதிகளுக்கு உட்பட்டு பார்மல் லுக், ஷார்ட் கட் தான் செய்கிறோம். மாதத்திற்கு 50 முதல் 100 மாணவர்களாவது எங்கள் கடையில் இலவசமாக முடிதிருத்தம் மேற்கொள்கின்றனர். 10 ஆண்டுகளாக இந்த சேவையினை வழங்கி வருகிறோம். இதை இன்னும் தொடர்ந்து வழங்குவோம்” என அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார் தணிகைவேல்.

View this post on Instagram

A post shared by Adyar Times (@adyartimes_offl)



இன்ஸ்டாவில் இந்த வீடியோ 1.5 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், கமெண்டில் பலர் தணிகைவேலின் சேவையினை பாராட்டி வருகின்றனர்.