Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னைக்கு 700 கி.மீ. தொலைவில்.. தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது 'டிட்வா' புயல்!

By Christon
27 Nov 2025, 04:03 PM
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் 'டிட்வா' புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் 'டிட்வா' புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30-ம் தேதி வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நெருங்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புயல் உருவானதின் நிலவரம்

நேற்று (நவம்பர் 26) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று நள்ளிரவு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது இன்று (நவம்பர் 27) காலை 5.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் 'டிக்வா' புயல் உருவாகியுள்ளது.

தற்போதைய நிலை மற்றும் நகர்வு

'டிட்வா' புயலானது தற்போது இலங்கை அம்பாந்தோட்டையிலிருந்து, கிழக்கு-வடகிழக்கே சுமார் 130 கி.மீ. தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 700 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் வழியாகப் புயல் நகரும் என்றும், வரும் 30-ம் தேதி வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.