Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

உணவில் தேரை கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...அதிரடி காட்டிய அதிகாரிகள்

By Jayakumar
04 May 2025, 08:22 PM
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி உணவகத்தை தற்காலிகமாக மூடினர்
மட்டன் குழம்பில் தேரை

பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே பிரபல தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று ஒரு குடும்பத்தினர் மதியம் உணவு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு ஒரு பிரியாணி மற்றும் அசைவு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் ஊழியர்கள் கொண்டு வந்து கொடுத்த மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது அதில் பெரிய அளவிலான ஒரு பொருள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அதனை தனியாக எடுத்து பார்த்தபோது முழு தேரை அப்படியே இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

இதையடுத்து உணவு சாப்பிட்டவர்கள் ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்ட நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த உணவை சாப்பிட்ட நபர்கள் உணவில் முழு தேரை இருந்ததை அப்படியே வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் பரவ விட்டு வருகின்றனர். மேலும் அந்த உணவை சாப்பிட்டு செலுத்தியதற்கான பில்லையும் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகார் எழுந்த உணவகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் வேலவன் தலைமையில் அங்கிருந்த உணவுப் பொருட்களையும் சோதனைக்காக எடுத்துச் சென்ற அதிகாரிகள் தற்காலிகமாக உணவகத்தை மூடி சென்றனர். இதனால் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள் பாதியிலேயே திரும்பிச் சென்றனர். மேலும் உணவகத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருந்த நிலையில் உணவகம் மூடப்பட்டதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.