தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கூட்டுறவு வங்கிகளில் 14.23 லட்சம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனில் ரூ.2,044 கோடியைத் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனினும், தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி தள்ளுபடி முழுமையாக வழங்கப்படவில்லை எனக் கூறி விவசாய அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
கடந்த மார்ச் 4-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், "5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள விவசாயிகளின் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்; திமுக அரசு செய்தது போல தகுதிகள் என எதையும் நிர்ணயித்துப் பாகுபாடு காட்ட மாட்டோம்" என்று உறுதியளித்திருந்தார்.
ஆனால், தற்போது காவிரி டெல்டா பகுதிகளில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் 2.5 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள நிலையில், தற்போதைய குறைந்தளவிலான தள்ளுபடி அறிவிப்பால் 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள பெரும்பாலான விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். முந்தைய அதிமுக, திமுக ஆட்சிகளைப் போல எவ்வித நிபந்தனைகளும் இன்றி கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
தமிழக கூட்டுறவுத் துறையில் சுமார் 4,000 கடன் சங்கங்களும், 24 மத்திய கூட்டுறவு வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2006-இல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ரூ.7,000 கோடியையும், 2016-இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ரூ.5,318.73 கோடியையும் பயிர்க்கடனாகத் தள்ளுபடி செய்திருந்தன. தொடர்ந்து 2021 பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடியை, அடுத்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் முறைப்படி நிறைவேற்றினார். கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படும் போது அதற்கான தொகையை அரசு உடனே வழங்காமல் தவணை முறையில் இழுத்தடிப்பதால், வங்கிகளுக்கு ஏற்படும் வட்டி இழப்பைத் தடுக்க நபார்டு (NABARD) வங்கி கடந்த ஆண்டு நவம்பரில் புதிய நிபந்தனைகளை விதித்தது.
அதன்படி, 'நபார்டு வங்கியின் அனுமதியின்றி மாநில அரசுகள் கடன் தள்ளுபடியை அறிவிக்கக் கூடாது; அப்படியே அறிவித்தாலும் அத்தொகையை அதிகபட்சம் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்' என்ற கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்தது. இந்த கடுமையான விதிமுறைகள் தெரிந்தே இம்முறை திமுக பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை அளிக்காத நிலையில், நபார்டு வங்கியின் புதிய நிபந்தனைகளை பொருட்படுத்தாமல் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தள்ளுபடி வாக்குறுதிகளை வாரி வழங்கின. தற்போது தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள தவெக அரசு, நபார்டு வங்கியின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றமுடியாமல் விவசாயிகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது