தமிழ்நாடு

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

By nagalekshmi
24 Apr 2025, 01:09 PM
சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திராவிட கழகம் சார்பில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறியுள்ளார்.

மேலும், பொன்முடியின் பேச்சு, கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது எனவும் மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்கள் அளித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பதவி பிரமாணத்தை மீறி செயல்பட்ட அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், வழக்குக்கு தொடர்பில்லாத முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதை மனுதாரர் ஜெகன்நாத் ஏற்றுக் கொண்டதை அடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பகுதிகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.