Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அமைச்சர் பொன்முடி மீது பாஜக பிரமுகர் சேற்றை வீசிய விவகாரம் – காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

By Jayakumar
12 Mar 2025, 01:07 PM
மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் ஜாமின் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை எனக் கூறி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான கவுதம சிகாமணி ஆகியோர் மீது சிலர் சேற்றை வீசினர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது குறித்து பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், தன் மீது தவறாக வழக்கு பதியபட்டுள்ளதாகவும், 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்

மேலும் படிக்க: இருமொழியை கொள்கையை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள்- மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சரமாரி கேள்வி