தமிழ்நாடு

ரூ.1 லட்சம் கடனுக்காக தம்பதி கடத்தல்- சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீஸ்

By Jayakumar
30 Jun 2025, 12:32 PM
புதுக்கோட்டையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி கணவன் -மனைவியை காரில் கடத்திய சம்பவம் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, சொக்கம்பேட்டை தேவர் தெருவில் வசித்து வரும் நாடிமுத்து மகன் சத்யராஜ் என்பவர் குடும்ப தேவைக்காக கடனாக ஒரு லட்சம் ரூபாயை கறம்பக்குடியில் ராஜேஷ் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரும் அதன் உரிமையாளர் ராஜேஷ் என்பவரிடம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

தம்பதி கடத்தல்

வாங்கிய பணத்தை திருப்பி செலுத்துமாறு பலமுறை கூறியும் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படும் நிலையில், ராஜேஷ் பேங்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் அவரது சகோதரர் சூர்யா ஆகிய இருவரும் சேர்ந்து ஆதனக்கோட்டை அருகே உள்ள வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று திரும்பும் வழியில் நேற்று மாலை 3 மணி அளவில் புதுக்கோட்டை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை வண்ணாரப்பட்டி சாலை பிரிவில் வைத்து சத்யராஜ் மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரையும் கடத்தியதாக கந்தர்வகோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்படி கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் மற்றும் கந்தர்வகோட்டை காந்தி சிலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட கந்தர்வகோட்டை போலீசார் சம்பந்தப்பட்ட காரை மடக்கி பிடித்துள்ளனர்.ஆனால் அந்த காரில் சத்யராஜ் மற்றும் கடத்தல்காரர்கள் ஆன ராஜேஷ் மற்றும் சூர்யா ஆகிய மூவர் மட்டுமே இருந்துள்ளனர். சத்யராஜ் மனைவி மணிமேகலை குறித்து விசாரித்தபோது, கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே வரும்போது மணிமேகலையை மற்றொரு காரில் கடத்திச் சென்று விட்டதாகவும், தனது மனைவியை காப்பாற்றுமாறும் சத்யராஜ் போலீசாரிடம் கூறியுள்ளார்.

மடக்கி பிடித்த போலீஸ்

சிறிது நேரத்தில் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட மணிமேகலை கடத்தல்காரர்கள் தம்மை அக்கச்சிபட்டி பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டு சென்றுவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு காவல்துறையினர் சென்று மணிமேகலையை பத்திரமாக மீட்டு கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் கடத்தல் சம்பவம் உறுதியானது.

இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ராஜேஷ் மற்றும் அவரது சகோதரர் சூர்யா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் வைத்து கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக கந்தர்வகோட்டையில் கணவன் மனைவியை பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் கந்தர்வகோட்டை பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.