Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மலைப்பாம்பு விவகாரம்.. டிடிஎப் வாசன் தரப்பில் விளக்கம்

By nagalekshmi
31 Dec 2024, 07:23 PM
மலைப்பாம்பை கையில் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த வீடியோ வெளியானது குறித்து டிடிஎஃப் வாசன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

சர்ச்சைக்கு பெயர் போனவரான பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி அதை வீடியோவாக தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களிடையே கவனம் பெற்று வந்தார். கடைத்திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இவர் செல்லும் இடங்களில் எல்லாம், அதிகளவில் ரசிகர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக்கூறி இவர் மீது வழக்கு பதியப்பட்டது.

பின்னர் அதிவேகமாக பைக் ஓட்டுவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது என தொடர்ந்ததால், காவல்துறை இவருக்கு பலமுறை எச்சரிக்க விடுத்த நிலையில், வேகமாக பைக் ஓட்டுவது, இரண்டு கைகளையும் விட்டுவிட்டு பைக் ஓட்டுவது என அடுத்தடுத்த வழக்குகளில் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இதனால் பைக் ரேஸரான வாசனுக்கு 10 ஆண்டுகள் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு தடை விதித்து  வழக்கு ஒன்றில் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. 

இந்த தடையை தொடர்ந்து, டிடிஎஃப் வாசன் தனது கார் மூலமாக ஊர் சுற்றி வந்த நிலையில் விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.  யூடியூபர் டிடிஎஃப் வாசன்,  எப்போதும் வழக்கு, ஜாமின் என்று சுற்றி வரும் நிலையில், புதிதாக தனது கையில் பாம்பு ஒன்றை சுற்றியபடி காரில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது  மலைப்பாம்புடன் விளையாடிக் கொண்டு சென்ற வீடியோ குறித்து டிடிஎஃப் வாசன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் உள்ள செல்லப்பிராணி கடையில் இருந்து மலைப்பாம்பு வாங்கப்பட்டதாகவும், அதற்கான  சான்றிதழ், செல்லப்பிராணி கடை உரிமையாளரால் வழங்கப்பட்டுள்ளதாகவும்,  தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி, வழங்கப்பட்ட உரிமம், குடியேற்றச் சான்றிதழ் மற்றும் தடையில்லா சான்றிதழ் ஆகியவை தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளால் ஏதேனும் சம்மன் அனுப்பப்பட்டால், எந்த தயக்கமும் இல்லாமல் அதற்காக ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.