தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு அபராதம்!

By VASUKI
25 Jun 2025, 12:00 PM
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ் தொழில் மற்றும் வணிக உதவி இயக்குனர் பணியிடங்களுக்கு, கடந்த 2019 ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பாணையில், விண்ணப்பதாரர்கள் தொழிற்சாலை அல்லது பணிமனைகளில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பணிமனை அல்லது தொழிற்சாலை அனுபவம் இல்லாமல், கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றிய இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலை அனுபவம் பெற்ற தங்களுக்கு பணிநியமனம் வழங்க உத்தரவிடக் கோரியும், பிரியங்கா மற்றும் திவ்யா ஜானகி ஆகிய இரு விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உதவி பேராசிரியர்களாக ஆய்வக பணி அனுபவத்தை தொழிற்சாலை அனுபவமாக கருத முடியாது எனக் கூறி, தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்தது. மேலும், மனுதாரர்களை இப்பணிக்கு நியமிப்பது குறித்து எட்டு வாரங்களில் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்கவேண்டும் எனவும் கடந்த 2024 ம் ஆண்டு மே 24 ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, விண்ணப்பதாரர் பிரியங்கா, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் நிர்மல்ராஜ், நேரில் ஆஜராகியிருந்தார். கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததால் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை சட்ட உதவி மையத்துக்கு 10 நாட்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.