தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை: தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் ‘மாபெரும் வரலாற்று அநீதி"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

By Christon
15 Apr 2026, 01:15 PM
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் 'கருப்புக் கொடி' போராட்டம் நடத்த இன்று அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் 'கருப்புக் கொடி' போராட்டம் நடத்த இன்று அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது, "டிலிமிட்டேஷன் என்ற பெயரில் பாஜக அரசு தனது லிமிட்டை தாண்டி, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது. வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்கும் வகையில் தென் மாநிலங்கள் அரசியல் வலிமையை இழக்கும் வகையில் நடப்பதை பார்த்துக் கொண்டு தமிழ்நாடு சும்மா இருக்காது.

ஒவ்வொரு குடும்பமும் தெருவுக்கு வந்து போராடும் எனத் தெரிவித்திருந்தேன். யார் நல்லது சொன்னாலும் கேட்காத மத்திய பாஜக அரசு இதையும் கேட்கவில்லை. சட்டத்திருத்தம் கொண்டு வந்து தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கப் பார்க்கிறார்கள். நாளை கொண்டுவரப்போகும் சட்டத் திருத்தத்தால் வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களின் தொகுதிகள் வேறுபடும்.

தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் தொகுதிகள் அதிகரிக்கப்படும் எனக் கூறிவிட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு மிக மிக கூடுதலாக தொகுதிகள் அதிகரிக்கப்பட்டு, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமே தேவையில்லை என்ற நிலையைக் கொண்டு வரப் போகிறார்கள். இதைதான் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி எனக் கூறுகிறோம்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை இது. தேச வளர்ச்சிக்காக நாங்கள் துணை நின்றால் எங்களின் அரசியல் உரிமையைப் பறிப்பீர்களா?

தமிழர்களையும் தென் மாநில மக்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக பார்க்கிறீர்கள். டெல்லி பாஜகவுக்கு தமிழர்கள் யார் எனக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாடாளுமன்றத்தில் நாளை அவர்கள் கொண்டு திட்டமிட்டிருக்கும் கருப்புச் சட்டத்துக்கு எதிராக அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுங்கள். இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துச் செல்லும் எதேச்சதிகார பாஜக அரசுக்கு எதிராக கருப்புக் கொடியேற்றுவோம். இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் எதிரான போராட்டம் என்பதை பாஜக தொடர்ந்து நிரூபிக்கிறது. அவர்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதற்காக சதித் திட்டத்தை சட்டமாகவே கொண்டு வருகிறார்கள். சதியை எப்படி சட்டமாக இயற்ற முடியும்? ஒவ்வொரு வீட்டிலும் பொது இடங்களிலும் கருப்புக் கொடியேற்றுவோம்.

மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறேன். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது. இந்த கருப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது. 8 கோடி தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கை இது. அரசியல் எல்லைக் கடந்து தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க தமிழ்நாடே ஓங்கி ஒலிக்கட்டும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்" எனத் தெரிவித்துள்ளார்.