தமிழ்நாடு

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கு... தூக்கு தண்டனை கைதி விளக்கமளிக்க உத்தரவு..!

By VASUKI
23 Jan 2025, 03:26 PM
கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரிய விசாரணையில், தனக்கு வழக்கறிஞர் நியமித்துக் கொள்கிறாரா என விளக்கமளிக்க, குற்றவாளி சதீஷை ஜனவரி 29ம் தேதி காணொலியில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2022ம் ஆண்டு பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் கல்லூரி மாணவி சத்யபிரியா என்பவரை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்-க்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த டிசம்பர் 30ம் தேதி அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது,  கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், வழக்கு தொடர்பான  நோட்டீஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷ்-க்கு வழங்கப்பட்டதாகவும் , அவர் அதனை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். 

சதீஷ்-க்காக இன்றைய தினம் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இது குறித்து அவரது கருத்தை தெரிவிப்பதற்காக, காணொலி மூலம் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக கூறினார். 

இதனையடுத்து, வழக்கறிஞர் வைத்துக் கொள்கிறாரா? அல்லது சட்ட உதவி தேவைப்படுமா? என்பது குறித்து விளக்கமளிக்கும் வகையில், சதீஷை, ஜனவரி 29ம் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.