Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

விவசாயிகளுடன் வெங்காயம் நடவு செய்த கோவை கலெக்டர்!

By MUTHUKRISHNAN
05 Jun 2025, 05:56 PM
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கோவை மாவட்டம் கிட்டாம்பாளையத்தில் உள்ள அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் 15,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கலந்துகொண்டார்.

விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மரம் நடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வளர்ச்சித் திட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. காய்ச்சல் ஏற்பட்டால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்,” என்றார்.

மேலும், அரசூர் பகுதியில் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்காக 15 ஏக்கர் நிலத்தில் தொழில்நுட்ப பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கான முதற்கட்ட பணிகள் ரூ.200 கோடி செலவில் நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

ஏற்கெனவே, கிட்டாம்பாளையம் ஊராட்சி சார்பில் வெங்காய சாகுபடி மேற்கொள்ளப்பட்டது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி இருந்தது. இதற்காக அந்த ஊராட்சி தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிலையில், ஆட்சியர் மீண்டும் விவசாயிகளுடன் இணைந்து எலுமிச்சை வனத்தில் வெங்காயம் நடவு செய்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் துறை ரீதியாக ஆய்வு:

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 தளங்களில் 30-க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டிடங்களில் செயல்பட்டு வரும் அனைத்து துறை அலுவலகங்களுக்கும் இன்று நேரடியாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அலுவலகங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என ஆட்சியர் ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பேரூராட்சிகள் துறை, தணிக்கை அலுவலகம், மாவட்ட வழங்கல் துறை உள்ளிட்ட அலுவலகங்களுக்கும் ஆட்சியர் திடீர் விசிட் அடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பழைய தேவையில்லாத ஆவணங்களை ரெக்கார்டு அறைக்கு அனுப்பி வைக்கும் படி ஊழியர்களை கேட்டுக் கொண்டார்.

மேலும் சில அலுவலகங்களில் புதிதாக ஊழியர்களுக்கு வசதியாக கேபின்கள் அமைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பாராட்டினார். சிலர் பழைய ஆவணங்களை பாதுகாத்து வைப்பதற்கு தனி வசதி தேவை என்று கூறினர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.