தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு வழக்கு: அரபிக் கல்லூரி மாணவர்கள் குறியாக தீவிரவாத திட்டம்!

By VASUKI
19 Jun 2025, 11:17 AM
கோவை கார் குண்டுவெடிப்பில் வழக்கில், அரபிக் கல்லூரிக்கு வரும் மாணவர்களை குறி வைத்து தீவிரவாத செயலுக்கு பயன்படுத்த முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தற்கொலை தாக்குதல் என்று கூறப்பட்டது.

இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 14 பேரை கைது செய்யப்பட்டனர். 4 குற்றப்பத்திரிகைகளை தனித்தனியாக என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய தமிழக இஸ்லாமிய தீவிரவாத மற்றும் ஆட்சேர்ப்பு வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த அஹமத் அலி, ஜவாஹிர் சாதிக், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா அப்துல்லா என்ற மேக் ராஜா, சென்னை பாலவாக்கம் சேர்ந்த ஷேக் தாவூத் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மெட்ராஸ் அரபிக் கல்லூரியின் நிறுவனர் ஜமீல் பாஷாவால் தீவிரவாதியாக மாற்றப்பட்டவர்கள் என்று என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது.

இவர்கள் அந்த கல்லூரிக்கு பேராசிரியர்களாகவும், ஒருங்கிணைப்பாளர்களாகவும் இருந்து வந்ததாக என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் அரபிக் வகுப்புகளின் பெயரில், இவர்கள் இஸ்லாமிய சலபி-ஜிஹாதி எண்ணங்களை பரப்பியதாகவும், இளைஞர்களை ஏமாற்றி ஆட்சேர்ப்பு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக அரபிக் கல்லூரி நிறுவனரான ஜமீல் பாஷாவால் உருவாக்கப்பட்ட இவர்கள் படிக்க வரும் மாணவர்களில் தந்தை இல்லாதவர்களாக மாணவர்களை குறிவைத்து அவர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத செயலுக்கு இழுக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளனர் என்று என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. வகுப்பறைகள் மற்றும் சமூக ஊடகங்களை தீவிரவாத பரப்பலுக்கு பயன்படுத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட ஜமீல் பாஷா நடத்தி வந்த அரபிக் கல்லூரிக்கு சென்று என்ஐஏ அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

ஜமீல் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் இர்ஷாத், சையத் அப்துல் ரஹ்மான், முகம்மது ஹுசைன் ஆகியோர் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்து விட்டனர். இவர்களது இயக்கம் கிலாஃபத் ஆதரவு மற்றும் ஜிஹாத் போன்ற கோட்பாடுகளை பரப்பியதாகவும், ஜனநாயக அரசு அமைப்பை கைவிட்டு இஸ்லாமிய ஆட்சி அமைய வேண்டும் என்பதே நோக்கமாக இருந்ததாகவும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தீவிரவாத நடவடிக்கைகள் 2022 அக்டோபரில் நடைபெற்ற கோவை கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமாக இருந்ததாக என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது. தற்போது கைதாகி உள்ள அஹமத் அலி, ஜவாஹிர் சாதிக், ராஜா அப்துல்லா என்ற மேக் ராஜா, ஷேக் தாவூத் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் இன்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உள்ளனர். இதையடுத்து 4 பேரையும் உடனே காவலில் எடுத்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.