நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்றது.
103 தமிழர்களை மீட்க தீவிர நடவடிக்கை:
கைலாஷ் மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்காக நேபாளம் சென்ற 103 தமிழர்கள், அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அதனால் உருவான பாதிப்புகளால் சிக்கித் தவித்து வருகின்றனர்.
தமிழர்களின் பாதுகாப்பு குறித்து சட்டசபையிலும் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், சிக்கியுள்ள தமிழர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை:
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு உள்ளிட்டோர் மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் தற்போதைய நிலை, அவர்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர்பு, மீட்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மத்திய அரசுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படவும், நேபாளத்தில் உள்ள தமிழர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
4 அமைச்சர்கள் டெல்லி செல்ல உத்தரவு:
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் ஆதவ், ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். அங்கு மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
காத்மாண்டுவுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு:
இதனிடையே, நேபாளத்தில் நேரடியாக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான அதிகாரிகள் குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்பவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழு நேபாளத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, தமிழர்களின் நிலை மற்றும் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ளது.
தூதரக அதிகாரிகளுடன் தொடர் ஒருங்கிணைப்பு:
ஏற்கனவே இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகளும் மீட்பு பணிகள் தொடர்பான விவரங்களை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகின்றனர்.
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.