தமிழ்நாடு

2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பா? மத்திய அரசின் முடிவை விமர்சித்த முதல்வர்

By MUTHUKRISHNAN
04 Jun 2025, 09:55 PM
இந்தியாவின் முதல் சாதிவாரி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கடைசியாக 2011-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதன் பின் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியானது, கோவிட் பெருந்தொற்றால் நடத்தப்படாமல் போனது. இதற்கு மத்தியில் எதிர்கட்சிகள் பல சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கு இசைந்த மத்திய அரசு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க முடிவு செய்தது. இதற்கு இந்தியா முழுவதும் பலத்த ஆதரவு கிடைத்தது. இந்நிலையில், இன்று உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்ப்பு நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி நாடு முழுவதும் இந்தியாவின் முதல் சாதிவாரி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி கணக்கெடுப்பு பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்ந்த உறுப்பினர்கள் அரசின் இந்த அறிவிப்பினை வரவேற்று வரும் நிலையில், திமுகவின் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு:

இதுத்தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.

தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணை போகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.



மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்யும் பட்சத்தில் மக்களவையில் தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் தங்களது தற்போதைய பிரதிநிதித்துவத்தை இழக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநிலங்களின் முதல்வர்கள், பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்புடன் மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தரவுகள், திட்டமிடல், கொள்கை வகுத்தல் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை தீர்மானித்தல் போன்ற முக்கிய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த சாதிவாரி கணக்கெடுப்பு, நாட்டின் பல்வேறு சமூக குழுக்களின் சரியான பிரதிநிதித்துவம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.