தமிழ்நாடு

முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

By Christon
09 Jul 2026, 10:09 AM
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு முதல்வர் விஜய் நாளை அரசு பணி ஆணை வழங்கவுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் நாளை (ஜூலை 10) முதன்முறையாகக் கரூர் மாவட்டத்திற்குச் செல்லவுள்ளார். அங்குப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ள அவர், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு, கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதல்வர் விஜய் நாளை நேரில் வழங்கவுள்ளார். பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் இவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

மேலும் நாளை நடைபெறும் அரசு விழாவில், சுமார் 13,500 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய பிரம்மாண்ட தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிற்கும் முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டவுள்ளார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.

இதற்கிடையே, கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்மையில் தவெகவில் இணைந்தார். இதனால் கரூரில் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள சூழலில், அதனை மனதில் வைத்தே முதல்வர் விஜய் இந்த பயணத்தை மேற்கொள்கிறார் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.