Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

திருச்சியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

By Jayakumar
15 Jun 2025, 02:23 PM
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும் நாளையும் தஞ்சை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். அதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி சென்றடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி, கோவி. செழியன், அன்பில் மகேஷ் மெய்யநாதன் உள்ளிட்டோரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, அருண் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர் .

விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக ஸ்டாலின் கல்லணை சென்று அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். இதனைத்தொடர்ந்து, இன்று மாலை டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதனையடுத்து, தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதனைத்தொடர்ந்து அவர், நாளை காலை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளருமான துரை சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். மேலும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இதனையடுத்து, நாளை மாலை தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் விமான மூலம் சென்னை செல்ல உள்ளார் .

முதலமைச்சரின் வருகையை ஒட்டி திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போலீசாரை ஈடுபட்டுள்ளனர். மேலும் முதலமைச்சர் செல்லும் பாதைகளில் டிரோன்-கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.