Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பள்ளிப் பையில் கஞ்சா.. வகுப்பறைக்குள் பொட்டலத்துடன் வந்த பிளஸ் 1 மாணவன்!

By Christon
03 Feb 2026, 11:53 AM
சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் நடத்திய அதிரடி சோதனை

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வருகிறான். நேற்று காலை பள்ளி தொடங்கியபோது, மாணவர்களின் ஒழுக்கத்தை உறுதி செய்யும் வகையில் ஆசிரியர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த மாணவனின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த ஆசிரியர், அவனைச் சோதனை செய்தபோது, இடுப்புப் பகுதியில் கஞ்சா பொட்டலத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறையில் ஒப்படைப்பு

மாணவனிடம் கஞ்சா இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர், உடனடியாக தலைமை ஆசிரியைக்குத் தகவல் அளித்தார். தலைமை ஆசிரியை அந்தப் பொட்டலத்தைப் பறிமுதல் செய்ததோடு, எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார், சிறுவனைப் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மாணவனின் விசித்திர விளக்கம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவன் ஒரு விசித்திரமான பதிலைக் கூறியுள்ளார். "நான் பள்ளிக்கு வரும் வழியில் இந்தச் சிறிய பொட்டலம் கீழே கிடந்தது; அது என்னவென்று தெரியாமல் ஆர்வத்தில் எடுத்துக்கொண்டு வந்தேன்" என அவன் தெரிவித்துள்ளான். இருப்பினும், மாணவன் கூறுவது உண்மைதானா அல்லது யாராவது அவனிடம் விற்பனைக்காகக் கொடுத்து அனுப்பினார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு

மாணவன் சொன்னது போல கஞ்சா பொட்டலம் சாலையில் கிடந்ததா என்பதை உறுதி செய்ய, அவன் பள்ளிக்கு வந்த பாதையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் ஊடுருவி இருப்பதைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவம், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.