சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் மூத்த மகள் சுப்பு சௌமியா (20). அண்ணாசாலையில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த இவர், காதலனின் மறைவால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ரயில் ரீல்ஸால் நேர்ந்த விபரீதம்
சுப்பு சௌமியா, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். சதீஷ்குமாருக்கு சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' எடுப்பதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. கடந்த பிப்ரவரி 4-ம் தேதி, ரயில் நிலையம் ஒன்றில் ரயிலுக்கு முன்பாக நின்று ரீல்ஸ் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக ரயில் மோதி சதீஷ்குமார் படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 6-ம் தேதி உயிரிழந்தார்.
இறுதிச் சடங்கில் பங்கேற்கத் தடை
காதலனின் மரணச் செய்தி கேட்ட சுப்பு சௌமியா நிலைகுலைந்து போனார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளத் தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், குடும்பத்தினர் அதற்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே காதலனை இழந்த துக்கத்தில் இருந்த மாணவிக்கு, இது மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் நிகழ்ந்த துயரம்
கடந்த 9-ம் தேதி மாலை, கல்லூரி முடிந்து வீட்டிற்கு வருவதாகத் தந்தையிடம் போனில் கூறிவிட்டுச் சென்ற சௌமியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பள்ளி முடிந்து வந்த அவரது தங்கை கதவை உடைத்துப் பார்த்தபோது சௌமியா சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த அயனாவரம் போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். காதலன் இறந்த அதே துக்கத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.