Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி.. விவசாயிகள் கைது!

By VASUKI
16 Jun 2025, 12:11 PM
தஞ்சையில் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
தஞ்சையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று மதியம் விமானம் மூலமாக சென்னையில் இருந்து திருச்சி வந்தார். திருச்சியில் இருந்து சாலை வழியாக தஞ்சை வந்த முதலமைச்சர் அரசு நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தஞ்சையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற முதல்வருக்கு விவசாயிகள் கருப்புக்கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருமங்கலக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு கொள்முதல் செய்த விவசாயிகள், கரும்பு கொள்முதல் செய்ததற்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட அனைவரிடமும் மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தஞ்சையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சரை சந்திக்க கரும்பு விவசாயிகள் அனுமதிகேட்டு உள்ளனர். ஆனால் அனுமதி வழங்க மறுத்ததை தொடர்ந்து இன்று காலை திருவையாறு எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, வருகை தந்த முதலமைச்சரை அவர் வரும் வழியில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதற்காக விவசாயிகள் காத்திருந்தனர்.

தனியார் கரும்பு ஆலை கொள்முதல் செய்த கரும்புக்கான நிலுவைத்தொகையை விடுவிக்காதது குறித்து முறையிட சென்ற விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் விவசாயிகள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விவசாயிகளை குண்டு கட்டாக கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். இதையடுத்து தங்கள் மறைத்து வைத்திருந்த கருப்பு கொடிகளை காட்டி முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விவசாயிகள் கருப்புக்கொடி காட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.