Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

உஷார் மக்களே.. சென்னையில் தொடரும் சிலிண்டர் திருட்டுகள்!

By Christon
16 Apr 2026, 01:22 PM
சென்னையில் அடுத்தடுத்து சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, சென்னையில் அடுத்தடுத்து சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பரவலாகச் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், இதனைச் சாதகமாக்கிக் கொண்டு சென்னையில் வீடுகள் மற்றும் பள்ளிகளைக் குறிவைத்துச் சிலிண்டர் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகச் சென்னை கோட்டை, ராயப்பேட்டை மற்றும் ஆர்.கே நகர் பகுதிகளில் நடந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாகப் பலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர் வீட்டில் திருட்டு

சென்னை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மரகதம் என்ற தூய்மைப் பணியாளர், கடந்த 12-ஆம் தேதி வேலைக்குச் சென்றிருந்தபோது அவரது வீட்டின் கதவை உடைத்துச் சிலிண்டர் திருடப்பட்டது. இது குறித்துக் கோட்டை காவல் நிலைய போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், 17 வயது சிறுவன் மற்றும் தீனா என்பவரைக் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் மீது ஏற்கனவே கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைதான தீனா சிறையில் அடைக்கப்பட்டார், சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

பள்ளி சமையலறை மற்றும் ஆர்.கே நகரில் கைவரிசை

ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்துச் சிலிண்டர் திருடிய வழக்கில், பெருமாள் என்பவரை ராயப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட சிலிண்டர் மீட்கப்பட்டது; இவர் மீது ஏற்கனவே வழிப்பறி மற்றும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல், ஆர்.கே நகர் பகுதியில் ஜெயசித்ரா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 சிலிண்டர்கள் மற்றும் மோட்டாரைத் திருடிய வழக்கில் சண்முகம், ஸ்டீபன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.