சென்னை அடையாறில் இயங்கி வரும் எஸ்பிஐ (SBI) வங்கி மேலாளரைத் தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை அடையாரில் உள்ள எஸ்பிஐ என்.ஆர்.ஐ (SBI-NRI) கிளை இயங்கி வரும் கட்டிடம் கயல்விழி அழகிரிக்குச் சொந்தமானது ஆகும். அக்கட்டிடத்தின் மின்தூக்கி (லிப்ட்) பழுதடைந்ததால், அதனைப் பழுதுபார்ப்பது குறித்து வங்கியின் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், கட்டிட உரிமையாளரின் பிரதிநிதியைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
அவரிடமிருந்து எவ்வித பதிலும் வராததால், இது தொடர்பாக வங்கி மேலாளர் நேரடியாகக் கயல்விழி அழகிரியிடம் புகார் தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தைத் தொடர்ந்து வங்கிக்கு நேரில் வந்த கயல்விழி, மேலாளரை அவதூறாகப் பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது வங்கி மேலாளர் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்ததால், "நான் பேசும்போது கன்னத்தில் கையை வைத்துக் கொண்டா உட்கார்ந்திருப்பாய்?" என்று கூறி மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்பிஐ ஆர்.பி.ஓ (RPO) முதன்மை மேலாளர் நமச்சிவாயம் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில், வங்கி வளாகத்தில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த அடையாறு காவல்துறையினர், கயல்விழி அழகிரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.