Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கு: திமுக MP ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்!

By VASUKI
24 Jun 2025, 01:14 AM
சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், குற்றச்சாட்டுப் பதிவும் வழக்கின் விசாரணையும் வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திமுக எம்பி ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்துக்களை வாங்கியதாக கடந்த 2015 ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 7 ஆண்டுகள் நடந்த விசாரணைக்கு பின்னர் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட், மங்கள் டெக் பார்க் லிமிட்டெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பின், ஆ.ராசா உட்பட நான்கு பேர் மீதும், இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் 2023ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்த ஆ. ராசா, தனது வருமான வரி கணக்கு தாக்கல் விபரமும், வழக்கின் சில ஆவணங்களும் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்ட நிலையில், ஆ. ராசாவின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடவரதன், குற்றச்சாட்டுப் பதிவும், விசாரணையும் வரும் 30 தேதிக்கு நடைபெறும் என ஒத்திவைத்து உத்தரவிட்டார்.