Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பிரபல கோயிலின் உண்டியலுக்குள் தீ வைத்த மர்மநபர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்

By MUTHUKRISHNAN
28 Jun 2025, 08:10 PM
உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலிலுள்ள உண்டியலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகரில் உலக புகழ் பெற்ற அருள்மிகு ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் சுமார் ரூ.33 கோடி அளவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மூலவர் சன்னதி பாலாலயம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவிலின் முக்கிய நுழைவுவாயில் அருகே பெரிய திருப்பணி உண்டியல் உள்ளது. இந்த உண்டியலின் உள்ளே இருந்து லேசாக புகை கசியவே, உடனே கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி உள்ளிட்ட அலுவலக உதவியாளர்கள் உண்டியலை திறந்து பார்த்தபோது காணிக்கையாக செலுத்தப்பட்ட பணத்தில் தீ பற்றி எரிந்தது கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

சுமார் ஒரு லட்ச ரூபாய் பணத்திற்கும் மேலே, பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்த நிலையில் நல்வாய்ப்பாக ரூ.2,000 மட்டும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு உண்டியலில் தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் இக்கோவிலில் உள்ள அனைத்து உண்டியல்களின் காணிக்கையும் எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகப் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் முக்கியமான நுழைவுவாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய உண்டியலில் மனசாட்சி இல்லாமல் உண்டியலுக்குள்ளே தீ வைத்தது யார்? இவ்வளவு மெத்தனமாக கோவில் நிர்வாகம் இருப்பதற்கு யார் காரணம்? என பக்தர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.