தமிழ்நாடு

வீட்டுக்கே சென்ற போலீஸ்... அருள் விக்னேஷிடம் தீவிர விசாரணை! அடுத்து என்ன?

By kazhugu k
25 Nov 2026, 01:33 PM
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்திய காவல் துறையினர், நேரில் ஆஜராக சம்மன் வழங்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, அவர் கைது செய்யப்படலாம் என்றும், அரசியல் அழுத்தம் காரணமாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எம்.எல்.ஏ. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்தன.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமிருந்து முறையான புகார் வராததால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், தாம் எந்தவிதமான ஆபாசக் குறுஞ்செய்தியையும் அனுப்பவில்லை என எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மறுத்து வந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஆர். திரிசூலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் கருத்துகளைக் கேட்டுப் பதிலளிக்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடந்த 23ஆம் தேதி, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் அருள் விக்னேஷ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. பிணையில் வெளிவர முடியாத மூன்று பிரிவுகள் உள்பட மொத்தம் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான வழக்கை விசாரிக்க, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஜி. என். காமினி விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டுக்குச் சென்ற காவல் துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஷாநாஸின் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் முதற்கட்டமாக விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட காவல் துறையினரும் எம்.எல்.ஏ. வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அருள் விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஆய்வாளர் புவனேஸ்வரி, அருள் விக்னேஷிடம் சம்மன் வழங்கியுள்ளார்.

காவல் துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களைச் சேகரித்து வரும் நிலையில், விசாரணையின் அடிப்படையில் அருள் விக்னேஷ் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் காவல் துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மறுபுறம் கட்சித் தலைமை மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அருள் விக்னேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவருக்குச் சிறைத் தண்டனை கிடைப்பதுடன், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் பதவியையும் இழக்க நேரிடலாம் எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தவெக அரசு, சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருள் உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இத்தகைய சூழலில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகார் ஆளுங்கட்சிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ராஜினாமா செய்தால், சட்டப்பேரவையில் தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை மேலும் குறையும். ஏற்கெனவே பெரும்பான்மை பலம் தொடர்பான அரசியல் கணக்குகள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் தவெகவுக்கு அடுத்தகட்ட அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது.