தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

By Christon
22 Jul 2026, 01:22 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து 27 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, முந்தைய திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், அந்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற தற்போதைய தவெக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசின் மேல்முறையீட்டு மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் செல்வது உறுதியாகியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில், இனி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான முழு விசாரணையையும் சிபிஐ அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளவுள்ளது.