Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பசுவின் வாயில் சிக்கிய சொம்பு.. வைரல் வீடியோ

By Jayakumar
10 Jun 2025, 08:55 AM
காஞ்சிபுரம் அருகே பசு மாட்டின் வாயில் மாட்டிக் கொண்ட சொம்பை இளைஞர்கள் போராடி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், வடமங்கலம் பகுதியில் உள்ள பசு மாடு ஒன்று சொம்புக்குள் வாயை விட்டு தண்ணீர் குடிக்க முயன்றுள்ளது. அப்போது, சொம்பு மாட்டின் வாயில் வசமாக மாட்டிக் கொண்டது. சொம்பை வெளியே எடுக்க இயலாத அந்த பசு மாடு வலியால் துடித்துள்ளது. மேலும், கடந்த மூன்று நாட்களாக உணவு உண்ண முடியாமல் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்துள்ளது.

இந்த நிலையில் அதனை கவனித்த சில இளைஞர்கள், பசுமாட்டை பிடித்து கழுத்திலும் கொம்பிலும் இறுக்கமாக கயிற்றில் கட்டி, மாட்டின் முகத்தில் மாட்டியிருந்த சொம்பை போராடி எடுத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து அந்த இளைஞர்களை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.

இன்னும் இரண்டு நாட்கள் அந்த சொம்பு பசுமாட்டின் வாயில் இருந்திருந்தால், உணவு உண்ண முடியாமல் உயிரிழப்பதற்கான சூழல் உருவாகி இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூரில் பூனை ஒன்று சொம்புக்குள் தலையை விட்டு மாட்டிக் கொண்டது. இதனையடுத்து விலங்கு ஆர்வலர் ஒருவர் பூனையை காப்பாற்றும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.