தமிழ்நாடு

வேங்கை வயல் போல் மற்றொரு சம்பவம்.. மலம் கழித்த மர்ம நபர்கள்?

By Christon
30 Jun 2025, 11:15 PM
திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே நல்லமனார்கோட்டை ஊராட்சி, தொட்டனம்பட்டி கிழக்குத் தெருவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50 அடி உயரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருகிறது. நீர் தேக்கத்தொட்டி முழுவதுமாக கட்டப்பட்ட நிலையில் இன்னும், குழாய் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் தொட்டிக்குள் இறங்கி உள்ளே மலம் கழித்து அசுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தொட்டிக்குள் மது பாட்டிகள். பிளாஸ்டிக் கப், புகையிலை உள்ளிட்ட பொருட்களும் கிடந்துள்ளன.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரின் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தண்ணீர் தொட்டியில் மலம் கழித்து அசுத்தம் செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மூவேந்தர் புலிப்படை சார்பில் மனு கொடுத்துள்ளனர்.

மேலும், வேங்கை வயல் பிரச்சனை போல் விஷயம் பெரிதாவதற்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.