Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. போலீஸ் காவலை தவிர்க்க நாடகமாடிய ஞானசேகரன்?

By nagalekshmi
23 Jan 2025, 12:56 PM
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வலிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து சீரான போதும் போலீஸ் கஸ்டடியை தவிர்க்க நடித்ததாக கூறப்படுகிறது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து,  சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

கடந்த திங்கட்கிழமை மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் குற்றவாளி ஞானசேகரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதல் நாள் இரவு எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தனியாக தான் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே சென்றாரா? வேறு யாரேனும் உடன் வந்தார்களா? வேறு யாருக்கெல்லாம் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்பது குறித்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

அவரது செல்போனில் உள்ள வீடியோக்கள் குறித்து போலீஸார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தினர். அண்ணா நகர் காவல் நிலையத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி துணை ஆணையர் சினேகா பிரியா தலைமையில் போலீஸார் இந்த விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணை அனைத்தும்  எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ காட்சிகள் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

நேற்று முன்தினம் குற்றவாளி ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு  மருத்துவமனைக்கு அழைத்து  செல்லப்பட்டார். ஞானசேகரனுக்கு சிகிச்சை முடிந்த நிலையில் அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் எழும்பூரில் உள்ள சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக ஞானசேகரன் வலிப்பு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து சீரான போதும் போலீஸ் கஸ்டடியை தவிர்க்க நடித்ததாக கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ள துணை ஆணையர் ஒருவர் மருத்துவராக இருப்பதால், அவர் பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.