தமிழ்நாடு

அமோனியா வாயு கசிவு: ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க திமுக வலியுறுத்தல், அதிமுக வெளிநடப்பு!

By Christon
22 Jun 2026, 11:30 AM
சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது.
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது.

இன்றைய அமர்வில் திருவள்ளூர் அம்மோனியா வாயுக்கசிவு விவகாரம் குறித்து 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்திற்கு முன்பாகவே, தங்களைப் பேச அனுமதிக்கக் கோரி திமுக, அதிமுக உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்களுக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததுடன், சபாநாயகரைக் கண்டித்துச் சட்டமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, திருவள்ளூர், பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறி வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்தார் .

"இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிந்தது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. அமோனியா கசிவு காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர். 70 பெண்கள், 4 ஆண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் இதில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த வடமாநிலத்தவர்களின் உடல்கள் தமிழக அரசு செலவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான செலவை அரசே மேற்கொள்ளும். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இதையடுத்து பேசிய திமுக கொறடா எ.வ. வேலு, "திமுக தலைவர் சொன்னதைப் போல அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் பிரச்னைகளை பேரவைத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.