Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அப்பாவு

By VASUKI
07 Apr 2025, 12:04 PM
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில், இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் அந்த தியாகி யார்? என பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு சென்றனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் இவ்வாறு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பேட்ஜ் அணிந்து வந்ததைத்தொடர்ந்து, கேள்வி-நேரம் முடிந்தபின், டாஸ்மாக் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளதால், டாஸ்மாக் விவகாரம் குறித்து விவாதிக்க அவையில் இடமில்லை என்று கூறி அனுமதி மறுத்தார்.

இதனை தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி மறுகக்ப்பட்டதைத் தொடர்ந்து, பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சட்டப்பேரவையில், அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுகவினரை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் மட்டும் சட்டப்பேரவையில் அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.