Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து.. ஒருவர் உயிரிழந்த சோகம்

By Jayakumar
13 Jun 2025, 08:56 AM
ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, பூந்தமல்லி - பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழித்தடத்தில் போரூர் முதல் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் இடையே பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதற்காக 2 தூண்களுக்கு மத்தியில் ராட்சத 'கர்டர்' அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், நேற்று இரவு ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானத்தின்போது இரண்டு பெரிய தூண்கள் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனால் பூந்தமல்லி - மவுண்ட் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்..

மணப்பாக்கம் எல்&டி தலைமை அலுவலகம் அருகே ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த இரண்டு ஐ- கர்டர்-கள், அதன் தாங்கு தூண்களில் ஒன்றான A சட்டகம் நழுவி சரிந்து வீழ்ந்தது. மேலும், சாலை போக்குவரத்தை சீரமைக்க, சி.எம்.ஆர்.எல் (CMRL) அதன் ஒப்பந்தக்காரர்களுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு இரு சக்கர ஓட்டி உயிரிழந்ததை வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மாற்றம்..

இந்த விபத்தையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போரூர் முதல் பரங்கிமலை வரை எந்த மாற்றமும் இல்லை. வெளிச்செல்லும் போக்குவரத்து – மணப்பாக்கம், முகலிவாக்கம்-கொளப்பாக்கம்-போரூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் பயண திட்டங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

மெட்ரோ ரயில் கட்டுமானத்தின்போது ஏற்பட்ட விபத்தில் வாகன ஓட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.