தமிழ்நாடு

இனி கூட்டணி இல்லை... திமுக தனித்து நிற்கும் ! - ஆ.ராசா

By Sumalekha
25 Jun 2026, 08:02 PM
திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக கூட்டணி மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விழாவில் உரையாற்றிய ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சுட்டிக்காட்டி, “இந்த தலைவரை ஒரு தேர்தல் முடிவை வைத்து எடை போட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கூட்டணி அரசியல் குறித்து பேசிய அவர், “ஒரு கூட்டணிக் கட்சித் தலைவர், ‘திமுக கூட்டணியே இல்லை’ என்று கூறுகிறார். அவர் திமுக கூட்டணியில் இருக்க விருப்பமில்லை என்று சொல்லலாம். ஆனால் திமுக கூட்டணியே இல்லை என்று கூற அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று விமர்சித்தார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் 60-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் உள்ளன. ஒருவர் பொதுக்குழுவைக் கூட்டி கூட்டணி தொடருமா என்பதை அறிவிப்பதாக கூறுகிறார். விருப்பமிருந்தால் உடனே கூட்டணியில் இல்லை என்று அறிவிக்கட்டும்” என்றும் ஆவேசமாக பேசினார். “திமுக இனி யாருடனும் கூட்டணி இல்லை என்று அறிவிக்கட்டும். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடட்டும். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் அதுதான் சரியான வழி” என தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் அரசியல் சிந்தனைகளின் மொத்த உருவத்தையும் மு.க.ஸ்டாலினிடம் பார்க்கிறோம்” என்று புகழாரம் சூட்டினார்.
ஆ.ராசாவின் இந்தப் பேச்சு, சமீபகாலமாக திமுக கூட்டணிக்குள் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கூட்டணி தொடர்வது தொடர்பாக சில கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஆ.ராசாவின் கருத்துகள் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.