Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மருத்துவ கழிவுகள் விவகாரத்தில், ஒப்பந்த  நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்..? தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

By VASUKI
20 Jan 2025, 09:35 PM
நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கழிவுகள் சேகரிக்கும் ஒப்பந்த  நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நெல்லை மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் ஆறு இடங்களில் கொட்டப்பட்ட அனைத்து கழிவுகளும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக புற்றுநோய் மருத்துவமனை, ஹோட்டல் மீது நடவடிக்கை எடுத்துள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கழிவுகளை சேகரிக்கும் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு தரப்பில், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெற்று தர வேண்டும் என்றும் அந்த இழப்பை கொண்டு பாதிப்பை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இழப்பீட்டை வசூல் செய்வதற்கு கேரளா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தொடர்ச்சியாக நோட்டீஸ் மட்டுமே அனுப்பி வருவதாகவும் கேரள அரசுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக இது மூன்றாவது வழக்கு. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடு பெறுவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரளா அரசுக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம் வழக்கின் விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது