நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, அதிகளவில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளதாக அந்த ஆய்வின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட SIR நடவடிக்கையின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 74 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இந்த நீக்கம் குறித்து பல அரசியல் கட்சிகள் கேள்விகளை எழுப்பியதுடன், திமுகவுக்குச் சாதகமான வாக்காளர்களின் பெயர்களே அதிகளவில் நீக்கப்பட்டதாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த பின்னணியில், வாக்காளர்கள் நீக்கம் மற்றும் தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு ஒரு ஆங்கில நாளிதழ் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், குறைந்த எண்ணிக்கை வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் திமுக கூடுதல் வெற்றிகளைப் பெற்றுள்ளதும், வாக்காளர்கள் நீக்கம் அதிகமாக இருந்த தொகுதிகளில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 10,000-க்கும் குறைவான வாக்காளர்கள் நீக்கப்பட்ட 19 தொகுதிகளில் திமுக 7 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும், தவெக 2 இடங்களையும், மற்ற கட்சிகள் 4 இடங்களையும் கைப்பற்றின. அதேபோல் 10,000 முதல் 20,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 80 தொகுதிகளில் அதிமுக 24, தவெக 22, திமுக 20 இடங்கள் என பரவலான வெற்றியைப் பெற்றன.
ஆனால், வாக்காளர்கள் நீக்கத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தவெகவின் வெற்றி சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
20,000 - 30,000 நீக்கம் (66 தொகுதிகள்): தவெக 32, திமுக 21, அதிமுக 11 மற்றும் இதர கட்சிகள் 2 இடங்களில் வென்றன.
30,000 - 50,000 நீக்கம் (37 தொகுதிகள்): தவெக 24, திமுக 8, அதிமுக 5 தொகுதிகளைக் கைப்பற்றின.
50,000 - 80,000 நீக்கம் (22 தொகுதிகள்): தவெக 18, திமுக 3, அதிமுக 1 இடங்களில் வெற்றி பெற்றன.
குறிப்பாக, 80,000-க்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்ட 10 தொகுதிகளிலும் முழுமையாக தவெகவே வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, 30,000 மற்றும் அதற்கு மேல் வாக்காளர்கள் நீக்கப்பட்ட 69 தொகுதிகளைக் கணக்கிட்டால், அதில் தவெக 52 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதேவேளையில் திமுக 11 தொகுதிகளிலும், அதிமுக 6 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
வாக்காளர் நீக்கத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அந்தத் தொகுதிகளில் தவெகவின் வெற்றி வாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன.