Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

இலங்கை சிறையில் 30 தமிழர்கள்.. ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

By Christon
11 Oct 2025, 11:06 AM
இலங்கை மீனவர்களால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் அந்நிய செலாவணி பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த புதன்கிழமை (அக். 8) காலை மீன்பிடிக்கச் சென்ற சுமார் 30 மீனவர்கள், வியாழக்கிழமை (அக். 9) எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நான்கு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வேலைநிறுத்த அறிவிப்பு

மீனவர்களின் இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து, நேற்று (அக். 10) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில், இன்று ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் பாதிப்பு

மீனவர்களின் இந்தத் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 50,000 மீனவர்களும், மீன்பிடிச் சார்புத் தொழிலாளர்களும் வேலை இழந்ததுடன், அரசுக்கு தினசரி கிடைக்கும் ஒரு கோடி ரூபாய் அந்நிய செலாவணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளால், ராமேஸ்வரத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த பலரும் அருகிலுள்ள அண்டை மாநிலங்களுக்குப் பிழைப்புத் தேடிச் சென்றுவிட்டதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர் கைது நடவடிக்கைகளால் மீன்பிடித் தொழிலே அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.