Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலி..விஜய் இரங்கல்

By Jayakumar
08 Jul 2025, 09:20 PM
விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

3 பேர் பலி

இதைத்தொடர்ந்து போலீஸ் தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தவெக தலைவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

நலமுடன் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்

விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.

எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.