தமிழ்நாடு

உயிர்பிழைத்த 181 பயணிகள்.. சென்னையில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

By VASUKI
11 Aug 2025, 09:38 AM
ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்றில் நடுவானில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஐந்து எம்பிக்கள் உட்பட 181 பயணிகள் இருந்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து இரவு 8.15 மணியளவில் புறப்பட்ட இந்த விமானத்தில், காங்கிரஸ் எம்பிக்களான கே.சி. வேணுகோபால், கொடிக்குன்னில் சுரேஷ், அடூர் பிரகாஷ், கம்யூனிஸ்ட் எம்பி கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து எம்பிக்களும், 181 பயணிகளும் இருந்தனர்.

இரவு 10 மணியளவில் பெங்களூரு வான்வெளியைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதைக் கண்டறிந்த விமானி, உடனடியாகத் திருவனந்தபுரம் மற்றும் டெல்லியில் உள்ள விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளுடன் தொடர்பு கொண்டு, விமானத்தைச் சென்னையில் அவசரமாகத் தரையிறக்க அனுமதி பெற்றார்.

இரவு 11 மணியளவில் சென்னை வான்வெளியை அடைந்த விமானம், விமான நிலையத்துக்கு அருகே வட்டமடித்த பிறகு, இரவு 11.20 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமான நிலைய அதிகாரிகள் அவசரத் தரையிறக்கத்துக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

தரையில் இறங்கிய பயணிகளுக்கு உணவும் தேநீரும் வழங்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்யப் பொறியாளர்கள் குழு முயன்றபோதும், பழுதுபார்ப்பது சாத்தியம் இல்லாமல் போனது. இதைத் தொடர்ந்து, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் சுமார் இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமானி சரியான நேரத்தில் இயந்திரக் கோளாறைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உயிர்தப்பினர். இந்தச் சம்பவம்குறித்து டெல்லியில் உள்ள விமான ஆணையகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.