Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் வருகை!

By VASUKI
26 Apr 2025, 06:29 AM
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் தேதி அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் மார்ச் மாதம் 26 ஆம் தேதி அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 11 மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர் .

தகவல் அறிந்து மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இலங்கை அரசு 14 மீனவர்களையும் விடுதலை செய்தது. இந்நிலையில், நேற்று விடுதலை செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களும், கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 14 மீனவர்களுக்கு இந்திய தூதரக வாயிலாக சென்னை விமான நிலையத்திற்கு விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையம் மீனவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனைகளை முடித்த பின்பு வெளியே வந்த மீனவர்கள் அனைவரையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு தனி வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.